மகாலிங்கேஸ்வரர் கோயில்

Spread the love

*திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்*

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.
திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
கொடுமுடிப் பிரகாரம்:
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
ப்ரணவப் பிரகாரம்:
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.
திருவலஞ்சுழி – விநாயகர்
சுவாமிமலை – முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
திருவாரூர் – சோமஸ்கந்தர்
சிதம்பரம் – நடராஜர்
ஆலங்குடி – தட்சினாமூர்த்தி
திருவாவடுதுறை – நந்திகேஸ்வரர்
திருசேய்நலூர் – சண்டிகேஸ்வரர்
சீர்காழி – பைரவர்
சூரியனார்கோவில் – நவக்கிரகம்
தலத்தின் சிறப்பு: திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தச் சிறப்பு: கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *