மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும்

Spread the love

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.
குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.
அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.
ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.
“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.
“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.
“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.
“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.
“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள்.
உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை குறை.
படித்ததில் பிடித்தது…

 

buddha-708683_640

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *