முந்தி விநாயகனே…

முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார்தன் மகனே
வந்தனம் செய்தோமய்யா
வந்து நல்லருள் தாருமய்யா   

(பழம்பாடல்)

சுபகாரியங்கள், விழாக்கள் எதுவாக இருந்தாலும், முழுமுதற் தெய்வமாம் விநாயகப் பெருமான் முந்தி வந்து அருள் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், அவரைத் துதித்து வழிபடுவது நம் முன்னோர் மரபு. அவ்வகையில் தைப்பொங்கல் திருநாளிலும் ஆனைமுகனுக்கே முதல் வழிபாடு.

உத்தராயண புண்ணிய காலத்தின் துவக்கமான தை முதல் நாளை… நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், ஆதவனுக்கும் நன்றி சொல்லி வழிபடும் நாளாக்கிவைத்திருக்கி றார்கள் முன்னோர்கள். அவ்வகையில் பொங்கலும், கரும்பும், காய்கனிகளும் படைத்து வழிபடத் துவங்குமுன்… மஞ்சள் பிள்ளையார், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவரை முதலில் வணங்கியபிறகே மற்ற வழிபாடுகளைத்  தொடர வேண்டும்.
இந்த முதல் வணக்கம் மட்டுமல்ல, தைத் திங்களில் பிள்ளையாரைப் போற்றும் இன்னும் பல வழிபாடுகள் உண்டு. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

மார்கழியில் துவங்கி…

மார்கழி மாதம் முழுவதும் ஆண், பெண் அனைவரும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து, தினசரி கர்ம அனுஷ்டானங்களை முடித்துக்கொள்வார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப் பகுதியை சாணத்தால் மெழுகி, மாக்கோலம் போட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களைத் தூவி, ‘விக்கினங்களை நீக்கும் விக்னேஸ்வரா! எங்கள் வீடுகளில் அசுர மற்றும் பூத – பிசாசுகளின் தொல்லையால் எந்தவிதமான துயரமும் நேராதபடி காப்பாற்றுவாய்!’ என்று அவரிடம் வேண்டுவர். இப்படி வேண்டிக் கொள்வதால் பிள்ளையார் நம் வீட்டுக்குக் காவலாக இருப்பார்; துர்சக்திகள் நம் வீட்டை அணுகாது. அவை, நாம் வாசலில் போட்டுவைத்திருக்கும் மாக்கோலத்தின் பச்சரிசி மாவைச் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

இப்படி, மார்கழி மாதம் முழுவதும் வாசலில் வைக்கப்படும் விநாயக (சாணப் பிள்ளையார்) வடிவங்களைச் சேகரித்துவைத்து, தைப் பொங்கலுக்குப்பிறகு ஒரு நல்ல நாளில், மொத்த விநாயக வடிவங்களையும் ஓரிடத்தில் வைத்துப் பூஜை செய்து கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியம் செய்வார்கள். பின்னர், பிரத்யேகமாக செய்யப்பட்ட சிறிய தேர் ஒன்றில் அவற்றை வைத்து அலங்கரித்து, வாத்திய கோஷத்துடன் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த வழிபட்டால், வீட்டில் வறுமை நீங்கும்; வியாதி போகும்; செல்வம் சேரும்; விரும்பும் பேறுகள் கிடைக்கும் என்பது முன்னோர் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

பிள்ளையார் விரதங்கள்…

பொதுவாக ஆடி மற்றும் தை மாதங்களில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.  இரண்டு மாதங்களுமே அயன காலங்களின் துவக்கம். ஆகவே, இந்த மாதங்களில் வரும் கிருத்திகை, அமாவாசை, பூசம், பூரம் முதலான திருநாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வரிசையில் பிள்ளையாருக்கான விரத நாட்களும் சேரும்.

வெள்ளி பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தை ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமை களில் பெண்கள் அனுஷ்டிப்பர். அன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, சுத்தமான உடை உடுத்திக்கொண்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து தாழை மடல், நெற்கதிர் ஆகியவற்றைப் பரப்பி கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பூஜையை முடிப்பர். அதன் பயனாக துன்பம் நீங்கி, நிறைந்த செல்வம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெறலாம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தையும் பெண்களே அனுஷ்டிப்பார்கள். ஆடி அல்லது தை மாதம் வரும் ஏதேனும் செவ்வாய்க்கிழமையில் துவங்கி, இத்தனை செவ்வாய்க்கிழமைகள்  என்று கணக்கு வைத்துக்கொண்டு வழிபடுவார்கள்.

இரவில் அக்கம்பக்கத்துப் பெண்கள் யாவரும் ஒன்றுகூடி, நெற்குத்தி அரிசியாக்கி, இடித்து மாவாக்கி, உப்பு சேர்க்காமல், தேங்காய்த் துண்டங்கள் சேர்த்து கொழுக்கட்டை அவித்துப் படையல் செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்களே கொழுக்கட்டைகளை பகிர்ந்து உண்பார்கள். அத்துடன் விடிவதற்குள்ளாக, வழி பாட்டில் வைக்கப்படும் சாணப் பிள்ளையாரை அருகிலுள்ள நீர்நிலையில் கொண்டு சேர்ப்பார்கள். இதனால், சர்வ மங்கலங்களும் உண்டாகும்.

இந்திர விநாயகர்…

பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக, முதல் நாளன்று போகி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும்.
வடமாநிலங்களில் இந்த நாளில் இந்திரனுக்கு உரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். `போகி’ என்ற சொல், இந்திரனையும் குறிக்கும். மேலும், பயிர் விளைய மழை தேவை. மழைக்கு ஆதாரம் மேகங்கள். இந்திரனே மேகாதிபதி. ஆக, இந்திரனை வழிபடுவதால், மழைவளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அவ்வண்ணம் இந்திரனை ஆராதிப்ப துடன், அவர் வழிபட்ட தெய்வங்களையும் பூசிப்பதால், பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

இந்திர தேவன், பிள்ளையாரை வழிபட்ட ஊர் அச்சிறுபாக்கம். சிவபெருமான் ஆட்சீஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. தேவர்கள் பலரும் வழிபட்ட இந்தத் தலத்துக்கு இந்திரன் வந்து தீர்த்தம் அமைத்து, அதன் கரையில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறும். இந்த விநாயகருக்கு அச்சுமுறி விநாயகர் என்றும் திருப்பெயர் உண்டு (இந்தப் பெயர் முப்புரம் எரித்த கதையுடன் தொடர்புடையது என்பர்). இவரை வழிபடுவதால், வாழ்வில் இன்னல்கள் நீங்கி இந்திரபோகத்துக்குச் சமமான வாழ்வும் வரமும் கிடைக்கும்.

‘எங்கள் ஊரின் அருகிலோ சுற்றுப்புறத்திலோ இந்திரன் வழிபட்ட தலங்கள் எதுவும் இல்லையே’ என்பவர்கள், ஊரின் கிழக்கு திசையில் அருள் பாலிக்கும் விநாயகரை வழிபடலாம். கிழக்கு, இந்திரனுக்கு உரிய திசை. அங்கு கோயில் கொண்டிருக்கும் விநாயகரை வழிபட்டு,  அருளும் பொருளும் பெறலாம்.