பரிகாரம் மற்றும் மந்திரங்கள்

download (4)12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்
————————————————————————————-

ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
————————————————————————————-

மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:
————————————————————————————-

கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:
————————————————————————————-

சிம்ம ராசி:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:
————————————————————————————-

கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:
————————————————————————————-

துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:
————————————————————————————-

விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்.
————————————————————————————-

தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:
————————————————————————————-

மகர ராசி:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:
————————————————————————————-

கும்ப ராசி:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:
————————————————————————————-

மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்ப தோஷம்

காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

ஞானம் என்பது அறிவு.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

“சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

“மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்

நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும்

நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும்
அஸ்வினி:
முதற்பாகத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.
பரணி:
முதல் பாதம் தோஷமில்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷமுண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தை தரும். 4வது பாதம் முதல் 8 நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதற்கு சாந்தியாகத் துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன் அல்லது எருமை தானமளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.
கிருத்திகை:
முதலிரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும் இடையூறுகளும் உண்டாகும். ஆடு தானம் சிறந்தது. சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்க வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் நல்கும்.
ரோகிணி:
முதற் பாகம் அக்குழந்தைக்கும், மற்றும் அதன் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் அதன் தந்தைக்கும், மூன்றாம் பாதம் அதன் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்கு பாதங்களுக்கும் தோஷமுள்ளது, அத்துடன் தாய் மாமனுக்கும் கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர்களின் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியைத் தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும், நிறைந்த ஞானமும் பெறலாம்.
மிருகசீரிடம்:
நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெளர்ணமி விரதமிருந்து சந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர் சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.
திருவாதிரை:
முதல் மூன்று பாதங்கள் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானமளித்திடல் வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்துவந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
புனர்பூசம்:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது. திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.
பூசம்:
முதற்பாதம் தாய்மாமனுக்கும், 2து பாதம் மத்திய (நடு) பாகம் மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம் உண்டாக்கும். நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும், கடக லக்னமும் கூடிய ஆண்குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாகும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால் தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தர்ஷினா மூர்த்தியையோ, ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.
ஆயில்யம்:
முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாவது பாதம் அக்குழந்தைக்கும், அதன் தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் அதன் தாயாருக்குக் கெடுதி. நான்காம் பாதம் அக்குழந்தைக்கும் அதன் தந்தைக்கும் துன்பத்தை தரும். இதற்கு கிரக சாந்திகள், ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளயவர்களுக்கு வஸ்திரம் அன்னதானம் செய்வது மிகவும் அவசியம். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களை தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.
மகம்:
முதல்பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை அக்குழந்தை பிறந்தது முதல் ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். இரண்டு மற்றும் நான்காவது பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது. மூன்றாவது பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது, திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெரும் நன்மையளிக்கும்.
பூரம்:
நான்கு பாதங்களும் சிறிதளவு தோஷமுள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் அருணம் அல்லது மஹாஸரைம் பாராயணம் செய்வது மற்றும் ஆதித்ய ஹருத்யம் நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.
உத்திரம்:
முதற்பாதம், முதலிரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை ஆண் ஆயின் தந்தைக்கும், பெண் ஆயின் தாயாருக்கும் தோஷமுண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. இரண்டு மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷமுண்டு பண்ணும், இதற்குப் பரிகாரமாக தைல (எண்ணெய்) தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கும் பன்னிரண்டு ஆதித்யர்தனைச் சேர்ந்த ‘ஆர்ய மன்’ என்னும் சூரியனை வழிபடல் வேண்டும்.
அஸ்தம்:
ஒன்று இரண்டு மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள், ஆண் ஆனால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும். இத்தோஷத்தை ஸுவர்ணம் என்று கூறப்படும். பொன் தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹருதயம் பாராயணமும், சூரிய வழிபாடும் மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.
சித்திரை:
முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கு, தந்தைக்கு மற்றும் சகோதரர்களுக்கு தோஷமுண்டாகும். இரண்டாவது பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் எனின் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்குரிய கன்னி ராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தை தந்தைக்கும், பெண் குழந்தை தாயாருக்கும் தோஷமுண்டாகும். இத பிறந்த ஆறுமாத காலத்திற்கு நீடிக்கும். நான்காம் பாதம் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரமும் உண்டாகும். வஸ்திர தானம் ஏற்ற பரிகாரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரனை வழிபடல் வேண்டும. திருவண்ணாமலையில் கிழக்கு திசையில் உள்ள அஷ்டலிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்க வழிபாடு, செல்வம், செல்வாக்கு, பதவி உயர்வு தரும்.
சுவாதி:
நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.
விசாகம்:
நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது. செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தான்ய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.
அனுஷம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும். வருணனையும் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.
கேட்டை:
நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது. ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்றமுள்ள சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும். பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘தேவேந்திரனை’ வழிபடல் வேண்டும். இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.
மூலம்:
முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம், பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 2ஆம் பாதம் ஆண் குழந்தையால் அதன் தாய்க்கு துன்பம். பெண்ணாயின் சுபம். 3ஆம் பாத ஆண் குழந்தையால் பெருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பம். 3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுது எனின் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவு எனின் அதன் தாய்க்கும் உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்கு. இந்த நட்சத்திரத்தில் எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.
பூராடம்:
1, 2 மற்றும் 4ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் புத்திரன் தந்தைக்கும், புத்ரியானால் தாய்க்கும் தோஷமாகும். இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும், மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமாகும். நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் உதித்தோர். திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பெளர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.
உத்திராடம்:
நான்கு பாதங்களும் தோஷமில்லையாயினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் ‘விஷ கன்னியா’ யோக மேற்படும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் உள்ளன்புடன் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பலம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு மிக மிக உயர்ந்தது.
திருவோணம்:
தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து திருமாலை வழிபட்டாலும், சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்தாலும், லஷ்மி குபேர திருவுருவப் படத்தை – குபேர யந்திரம் – மந்திரம் கொண்டு பூஜித்தாலும், திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலும் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். வாகனப் பிராப்தியுண்டாகும்.
அவிட்டம்:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸுக்களை ஆராதிக்க வேண்டும். பித்துரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பூவளூர் ஆகிய ஊர்களில் உள்ள இறைமூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை பயக்கும்.
சதயம்:
தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் உதித்தோர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவருணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர்.
பூரட்டாதி:
முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கு கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க, லஷ்மி குபேர பூஜையை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.
உத்திரட்டாதி:
தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர், காமதேனுவை பூஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிப்பட்டாலும் நல்லவையெல்லாம் இடையூர் இன்றி வெற்றியுடன் நடைபெறும்.
ரேவதி:
முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளித்திடல் வேண்டும். பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான ‘பூஷா’ என்பவரையோ, சூரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சூரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்

கோபுர தரிசனம்

images (13)கோபுர தரிசனம் – கோடி புண்ணியம் (ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம்)
ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.
இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.
சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.
இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14, 000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.
அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது, அந்த சக்தி தூண்டப்பட்டு – கைகளை இணைத்து, மேலே உயர்த்தி வணங்கும்போது – கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.
இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள், உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.
சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்
அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.
மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.
ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.
மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.
சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.
விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.
மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.
பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.
அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.
பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.