மஹாசிவராத்திரி

Spread the love

மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சிவராத்திரிதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்கிறோம். சிவராத்திரியைக் கொண்டாடுவதும் அல்லது மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதும், இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. காரண அறிவின் அடிப்படையில் இயங்கும் எந்த ஒரு மனமும் இருளை எதிர்க்கும். சிந்திக்கின்ற மனங்கள் இயல்பாகவே ஒளியைத்தான் தேர்ந்தெடுக்குமே தவிர இருளை தேர்ந்தெடுக்காது. ஆனால் இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் ‘எது இல்லையோ அது’ என்பதுதான். எது ‘இருக்கிறதோ’ அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது ‘இல்லையோ’ அது சிவன்.

நீங்கள் கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, உங்களுடைய பார்வையின் நோக்கம் சிறியதாக இருந்தால், படைப்பின் பல அம்சங்களை நிறையவே பார்ப்பீர்கள். உங்கள் பார்வையின் நோக்கம் உண்மையில் பெரிய விஷயங்களை எதிர்பார்த்து இருந்தால், இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய இருப்பான, பரந்து விரிந்த வெறுமையைப் பார்ப்பீர்கள். வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் (Galaxies) அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை அனைவருடைய கவனத்துக்கும் வருவதில்லை. இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளாகவே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்த பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, ‘மஹாதேவா’ என்று குறிப்பிடுகிறோம்.

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருக்கும்போது, அவருக்குள் இயற்கையாகவே ஆன்ம எழுச்சி நிகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *