வருடத்தில் ஒரு நாள் பகல் தரிசனம்

Spread the love

 

 

தைப் பொங்கல் தரிசனம்

”திருச்சிற்றம்பலத்தில் இந்நேரம் அர்த்தஜாம பூஜை துவங்கியிருக்கும்தானே?” – பொய்கைநல்லூரின் அடர்ந்த வனப்பகுதியில், வெள்ளால மரத்துக்கு அருகில் அமர்ந்தபடி ஸ்ரீவான்கோபர் கேட்டார். அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீமகாகோபர், ”ஆமாம்… அனைத்து ஆலயங்களில் உள்ள சிவனாரும் இப்போது தில்லையம்பதிக்கு வந்திருப்பார்கள். சற்று நேரத்தில் திரை விலக்கி, தீபாராதனை காட்டுவார்கள்; ஆடல்வல்லானின் அற்புத தரிசனத்தில் பக்தர்கள் திளைப்பார்கள்” என்றார்.
இருள் சூழ்ந்த வேளையில், இரண்டு முனிவர்களும் வனத்தில் ஏன் அமர்ந்திருக்கின்றனர்?

‘இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா… துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட… இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர். ‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிய இந்திரன், ”தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள்; தக்க பதில் கிடைக்கும்” என்றான். அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர்; விவரம் சொல்லி விளக்கம் கேட்டனர். ”நீங்கள் தவம் செய்யும் இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதற்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வருகிறேன்” என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஆடல்வல்லான். இப்போது, சிவனாருக்காகத்தான் காத்திருக்கின்றனர்.

சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்தது; மெள்ள மெள்ள பக்தர்கள் வெளியேறினர்; கோயில் நடை சாத்தப்பட்டது; அடுத்த நிமிடம்… முனிவர்களுக்கு எதிரே காட்சி தந்தார் நடராஜ பெருமான். பதற்றமும் சிலிர்ப்பும் பொங்க இறைவனை நமஸ்கரித்தனர் முனிவர்கள். ”இல்லறமாக இருந்தாலென்ன… துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், உண்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது! இதில் உயர்வு தாழ்வுக்கு இடமே இல்லை. இரண்டும் இணையானதே!” என்று அருளினார் சிவனார். இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்றும், இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்ததாம் சிவபெருமானுக்கு!

”தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்” என்று முனிவர்கள் வேண்ட, ”அப்படியே ஆகட்டும்” என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். பொய்கைநல்லூர், பின்னாளில் பரக்கலக்கோட்டை ஆனது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கே… அழகிய ஆலயத்தில் வெள்ளால மரமாகவே காட்சி தந்து அருள்கிறார் ஸ்ரீபொதுஆவுடையார்! ஆம்… மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் சிவனார், இங்கே மரமாகவே காட்சி தந்து அருள்கிறார். முனிவர் பெருமக்களுக்கு கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட் கிழமை) திருக்காட்சி தந்து உபதேசித்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இங்கே சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இன்னொரு விஷயம்… சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் விமரிசையாக பூஜைகள் நடந்தேறும்.

ஆம்… கோயிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஒரு கால பூஜை, நான்கு கால பூஜைகள் என நடத்துவதுதானே வழக்கம். இங்கே… திங்கட்கிழமை மட்டும் இரவு திறந்து, நள்ளிரவில் நடை சார்த்தப்படும். பகலில் நடை திறக்கப்படுவதில்லை. எனவே, திங்கட்கிழமை அன்று பக்தர்கள், இங்கே வெள்ளமென குவிகின்றனர். அம்பாளுக்கு இங்கே சந்நிதி இல்லை.

திங்கள்தோறும் இரவில் திறக்கப்படும் இந்த ஆலயம், வருடத்தில் ஒரேயரு நாள் மட்டும் பகலில் திறக்கப்படுகிறது; ஸ்வாமிக்கு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது; லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகின்றனர். அந்த நாள்… தைத் திங்களாம் பொங்கல் திருநாள்!

சுற்றுவட்டார மக்களுக்கு இஷ்ட தெய்வம், குல தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே பொதுஆவுடையார்தான்! இவரை பிரார்த்தித்து நிலத்தில் விதைத்தால், அமோக விளைச்சல் உறுதி. இவரை வேண்டிக் கொண்டு, நகைக்கடை, பேக்கரி, துணிக்கடை என எந்த வியாபாரம் துவங்கினாலும் லாபம் நிச்சயம். இதில் மகிழ்ந்து, நெல் தருகின்றனர்; கம்பும் கேழ்வரகும் வழங்குகின்றனர்; தேங்காயையும் மாங்காயையும் தருகின்றனர்; ஆடு, கோழி, மாடு என தருகின்றனர்; பேனா, நோட்டுப் புத்தகம் வழங்குபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் பொங்கலின் போது ஏலத்துக்கு விடுவார்கள். இதை ஏலம் எடுத்துச் சென்றால், செல்வச் செழிப்புடன் திகழலாம்; நோய் நொடியின்றி வாழலாம்; கல்வி-கேள்வியில் சிறக்கலாம் என்று சிலிர்ப்புடன் சொல்கின்றனர் பக்தர்கள்.

பொங்கல் நாளில்… பொதுஆவுடையாரை வணங்கி வழிபடுங்கள்; சந்தோஷமும் அமைதியும் பொங்கலைப் போலவே பொங்கிப் பெருகட்டும்!

குரு பரிகாரத் தலம்!

ஸ்ரீவான்கோபர், ஸ்ரீமகாகோபர் ஆகிய இரண்டு முனிவர்களுக்கும், ஆலமரத்தின் ஒரு வகையான வெள்ளால மரத்தடியில் அமர்ந்தபடி, நடராஜ பெருமான் உபதேசித்து அருளியதால், குரு தட்சிணாமூர்த்தியின் சொரூபமாகவே கருதுகின்றனர் பக்தர்கள். ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட, குருவருள் நிச்சயம் என்கின்றனர்.

கதவே நடராஷர்!

ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கதவைத் திறந்தால் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். தவிர, மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்வார்கள் அர்ச்சகர்கள். அப்போது, ஸ்ரீமகாகோபர் மற்றும் ஸ்ரீவான்கோபர் இருவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். வாராவாரம் திங்கட்கிழமை மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர்.

விளக்குமாறு நேர்த்திக்கடன்!

உளுந்து, பயறு, கோதுமை, சாக்லேட், நெல், அரிசி… என எதை வேண்டு மானாலும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர் பக்தர்கள். விளக்குமாறில் உள்ள குச்சிகள் நீண்டிருப்பது போல், தங்களுக்கு நீண்ட கூந்தல் வேண்டும் என பிரார்த்தித்து, விளக்குமாறு செலுத்தும் பெண்களும் உண்டு!

ஆல இலை விசேஜம்!

ஆல மரத்தினுள், ஸ்ரீநடராஜபெருமான் ஐக்கியமானதாகச் சொல்கிறது தல வரலாறு. கருவறையில் காலூன்றி, பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கும் ஆல மரம், தல விருட்சமும்கூட! இந்த மரத்தின் ஒரேயரு இலையை பறித்துச் சென்று, வீட்டு பூஜையறை, பீரோ, பணப் பெட்டி, தானியக் குதிர் ஆகியவற்றில் வைத்து வழிபட… வளமான வாழ்வு பெறலாம்; நிறைவான நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *