தைப்பூசம்

Spread the love

​தைப்பூசம்

❀ தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.
❀ முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
❀ தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள்.
❀ முருகன் தேவர்களின் சேனாதிபதி, ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
தைப்பூச திருநாளும் அதன் மகிமையும் :
❀ பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்களாக தொகுத்தார். முக்கியமாக வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.
சித்தாந்தம் ➠ தெய்வம்
சைவம் ➠ சிவன்
வைணவம் ➠ விஷ்ணு
சாக்தம் ➠ சக்தி
சௌரம் ➠ சூரியன்
கணாபத்தியம் ➠ கணபதி
கௌமாரம் ➠ முருகன்
❀ இவற்றுள் முருகனை முக்கிய தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் உட்பிரிவு கௌமாரம் ஆகும். முருகக் கடவுளின் வழிபாட்டிற்கான விரத, திருவிழா நாட்களில் முக்கியமான ஒன்று தைப்பூசம் ஆகும். விழா என்றால் விழித்திருந்து செய்வது என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். இந்த நாட்களெல்லாம் சிறப்புமிக்க விழா நாட்களாகும்.
❀ இதில் தைப்பூசத்திருநாளில் முருகக் கடவுளிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக அவர் சன்னதி வந்து காணிக்கைகளை அவருக்கு செலுத்தி பூஜை செய்வதை தான் தைப்பூச திருநாளின் சிறப்பாகும். முருகப்பெருமானிற்கு கடியுண் கடவுள் என்றும் ஒரு பெயர் உள்ளது. புதியதை உண்பவர் என்று இதற்கு பொருளாகும்.
❀ வாழையோ, நெல்லோ, பழங்களோ தமது இடத்தில் எது விளைந்தாலும் தான் உண்பதற்கு முன் அதை இறைவனிற்கு அர்ப்பணித்துப் படைப்பதிற்கும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை காணிக்கையாக அர்ப்பணிப்பதற்கும், பயணிக்கும் விரத விழாவே தைப்பூச திருவிழாவாகும். முருகனின் அறுபடை வீடுகளில் பழனிக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு நடைபயணமாக செல்வது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது.
❀ தில்லை மூவாயிரவர்க்கும், இரணியவர்மனிற்கும் நடராஜர் தரிசனம் தந்து அருள் பாலித்ததும் தைப்பூசத் திருநாளில் தான்.
❀ ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாளில் தான்.
❀ புலிக்கால் முனிவரான (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார்.
❀ வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் முக்தி அடைந்தார்.
❀ தைப்பூசத்தில் அதிகாலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை. மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. அன்று பௌர்ணமி-யாகம் இருக்கும். கோவில்களில் தெப்ப உச்சவம் நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர். இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
மிக சிறப்பு வாய்ந்த இந்நாளில் 
எல்லாம் வல்ல முருகபெருமானிடம் நம்முடைய அனைத்து துயரங்களும் நீங்க பிரார்த்திப்போம்…!
மீள்பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *