குரு பெயர்ச்சி

Spread the love

இந்த ஜய வருடம் சூரிய பகவான் அதிகாரம் செய்யும் முது வேனிர் காலமான க்ரீஷ்ம ருதுவில், ஆஷாட மாதம் என்றழைக்கப்படும் ஆனி மாதம் 5 ஆம் தேதி (19.06.2014) அன்று குரு பகவானுக்கு உகந்த வியாழக் கிழமையன்று, கிருஷ்ண பட்சம் என்கிற தேய்பிறை சப்தமி திதியில், குரு பகவானுக்குரிய மூன்று நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவைகளில் மூன்றாம் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் (கும்ப ராசி), ஆயுஷ்மான் யோகத்தில் பவகரணத்தில், நேத்திரம் ஒன்று ஜீவன் பாதி, சித்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி எட்டு நாழிகை அளவில் காலை 08.47 மணிக்கு, குருபகவான் உச்சமடையும் தனிச்சிறப்பு பெற்ற கடக லக்னத்தில், மிதுன ராசியிலிருந்து தன் உச்ச ராசியான கடக ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு 13.07.2015 வரை சஞ்சரித்து, 14.07.2015 செவ்வாய் கிழமை காலை 06.25 மணி அளவில் சிம்மராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த கடக ராசி சஞ்சாரத்தில் கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி (09.12.2014) குருபகவான் வக்கிரமடைகிறார். (அதாவது பின்னோக்கி சஞ்சாரம் செய்யும் நிலை) பங்குனி மாதம் 26 ஆம் தேதி (09.04.2015) அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேர்கதி சஞ்சாரத்தை அடைவார்.

இந்த ஆனி மாதம் 29 ஆம் தேதி (13.07.2014), ஞாயிற்றுக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் அன்று உதயாதி 18 நாழிகை அளவில் நண்பகல் 1.00 மணிக்கு ராகு/ கேது பகவான்கள், துலாம்- மேஷம் ராசிகளிலிருந்து முறையே கன்னி, மீனம் ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இருபத்து மூன்று நாட்கள் இடைவெளியில், அதாவது 13.07.2014 அன்று ராகு/ கேது பகவான்களின் பெயர்ச்சியையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது என்பதை வாசக அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி குரு பகவானின் பெயர்ச்சி இந்த ஜய வருடம் வைகாசி மாதம் 30 ஆம் தேதி (13.06.2014) அன்று நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி இந்த ஜய வருடம் ஆனி மாதம் 7 ஆம் தேதி (21.06.2014) ராகு/ கேது பகவான்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது.

பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச மஹரிஷிக்கும் சிரத்தா தேவிக்கும் பூராட நட்சத்திரத்தில் குருபகவான் எனப்படும் தேவகுருவான பிரகஸ்பதி உதித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவருடைய மனைவியின் பெயர் தாரை என்பதாகும். இவருடைய புத்திரன் கசனாவார். இவர் தன் தவத்தால் கிரக பதவியை அடைந்து தேவர்களுக்குக் குருவானார். இவருடைய சகோதரரின் பெயர் உதத்தியன் என்றும் சகோதரி யோகசித்தி என்றும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகுருபகவான் நவக்கிரகங்களில் முதன்மையான சுபக்கிரகமாவார். தெய்வீக அறிவிற்கும், வேதாந்த ஞானத்திற்கும் மூலகர்த்தாவாகத் திகழ்கிறார். ஸ்ரீகுருபகவான் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமைந்து விட்டால் கல்வி, ஞானம், அறிவு, தனப்பெருக்கம், புத்திர விருத்தி, பதவி, புகழ், செல்வாக்கு, தானதர்மம், நிதி நிறுவனத்தில் உயர்பதவி ஆகியவைகள் கிடைக்கும்.

ஸ்ரீ வியாச பகவான் குருபகவானை,

“தேவானாம்ச ருஷீனாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோ கேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!”

தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆசாரியன், பொன்னன்! மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவன். அந்த ப்ருஹஸ்பதியை வணங்குகிறேன் என்கிறார்.

கர்ம வினையும் குருபகவானும்:

கர்ம வினைகள் மூன்று வகைப்படும். முதலாவதாக, “சஞ்சித கர்மா’ அதாவது தொடர்ந்து பல பிறவிகளில் நாம் செய்த வினைகள்; “பிராப்த கர்மா’ அதாவது நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைகள்; “ஆகாமி’ நாம் இந்தப் பிறவியில் செய்யும் வினைகள்.

ஒருவரின் ஜாதகத்தில் 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ராசிகள் சஞ்சித கர்மாவை குறிக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். குருபகவானுக்கு உகந்த மூன்று திரிகோண ராசிகளும் பலம் பெற்ற இடங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் குருபகவானுக்கு ஏழாம் வீட்டைத் தவிர்த்து ஐந்து மற்றும் ஒன்பதாம் வீட்டைப் பார்க்கும் சிறப்புப்
பார்வைகள் உண்டு.

“ஓடினவனுக்கு ஒன்பதில் குரு’ என்பார்கள். அதாவது குருபகவான் ஒன்பதாம் ராசியில் இருந்தால் 1 மற்றும் 5 ஆம் ராசியைப் பார்வை செய்வார். ஐந்தாம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்தால் 9 மற்றும் லக்னத்தைப் பார்வை செய்வார். “குரு பார்க்க கோடி பாப நிவர்த்தி!’ என்பார்கள். அதனால் குருபகவான் தான் இருக்கும் வீட்டையும், பார்க்கும் வீடுகளையும் புனித படுத்துவார் என்று கூறமுடிகிறது. அதனால் குருபகவானின் கருணையினால் நம் கர்ம வினைகள் தீர்ந்துவிடும் என்றால் மிகையாகாது.
“குருபகவானின் தசையின் காலம் 16 வருடங்கள். இதில் குருமஹா தசையின் பிற்பகுதி யோகத்தைக் கொடுக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும்’.

சுபம் தரும் குரு ஹோரை:

குரு ஹோரையில் ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடலாம். சான்றோர்களைச் சந்திக்கலாம். ஆன்மிக குருவைச் சந்திக்கலாம். தான தருமங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

குருபலம்:

ஒருவரின் ராசியிலிருந்து (சந்திர பகவானிருக்குமிடம்) குருபகவான் 2,4,7,9,11 ஆம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் குருபலம் கூடும் காலமென்று கூறுகிறோம். குருபகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சராசரியாக நான்கு மாதங்கள் மற்ற ராசிக்காரர்களுக்கும் குருபலன் உண்டாகும் என்று கூறலாம். குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமரும் போது மூன்று லட்சம் தோஷங்கள் மறைகிறது என்று கூறுவர். குருபகவானின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் ஆகியவைகள் மறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *